2016ம் ஆண்டுக்கான ஹஜ் விண்ணப்பங்கள் வரவேற்பு.

சென்னை: 2016ம் ஆண்டுக்கான ஹஜ் பயணத்துக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2016ம் ஆண்டில் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்களிடம் இருந்து, சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

சென்னை, எண்.13, மகாத்மா காந்தி சாலையில் (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை), ரோஸிடவர், 3ம் தளத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் செயலாளர் மற்றும் செயல் அலுவலரிடம் இருந்து ஹஜ் 2016க்கான விண்ணப்பப்படிவங்களை நாளை முதல் (14ம் தேதி) பெற்றுக்கொள்ளலாம் அல்லது இவ்விண்ணப்பங்களை www.hajcommittee.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தை நகல்கள் எடுத்தும் பயன்படுத்தலாம். வாழ்நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலமாக ஹஜ் பயணத்தை மேற்கொள்ளலாம் என்னும் விதிமுறையை இந்திய ஹஜ் குழு செயல்படுத்தி வருகிறது. 08-02-2016 அன்று அல்லது அதற்கு முன்பு வழங்கப்பட்டு, குறைந்தது 10-03-2017 வரையில் செல்லத்தக்க கணினி வழி பதிவு செய்யக்கூடிய பன்னாட்டு பாஸ்போர்ட்டை விண்ணப்பதாரர்கள் வைத்திருக்க வேண்டும். ஐ.எப்.எஸ். குறியீடு உடைய வங்கியிலுள்ள தங்களின் கணக்கு விவரங்களை மனுதாரர்கள் அளிக்க வேண்டும். மேலும் விவரங்களை www.hajcommittee.gov.in இணையத்தளத்தில் அறியலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு 08-02-2016-க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment