மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர்!

சென்னை ஆலந்தூர்- கோயம்பேடு இடையேயான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா, காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை நகரில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் கடந்த திமுக ஆட்சியில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. ரூ.14 ஆயிரத்து 600 கோடி மதிப்பில் சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முதல் வழித்தடமான வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை 23.05 கிலோ மீட்டர் தூரத்துக்கும், 2வது வழித்தடமான சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை 22.50 கிலோ மீட்டர் தூரத்துக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் சுரங்கப்பாதையில் 16 ரயில் நிலையங்கள், உயர்த்தப்பட்ட பாதையில் 16 ரயில் நிலையங்கள் என 32 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

முதல் கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் நிறைவடைந்து உள்ளன. இந்த பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சதீஷ்குமார் மிட்டல் ஆய்வு செய்து, பயணிகள் சேவையை தொடங்குவதற்கான சான்றிதழை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, ஆலந்தூர்-கோயம்பேடு இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கியது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் மெட்ரோ ரயில் பயணிகள் சேவையை தொடங்கி வைத்தார்.

அத்துடன் அந்த வழித்தடத்தில் உள்ள கோயம்பேடு, கோயம்பேடு பஸ் நிலையம், அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுதாங்கல், ஆலந்தூர் ஆகிய 7 மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் பணிமனை ஆகியவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார்.

ஆலந்தூரில் இருந்து நண்பகல் 12.09 மணிக்கு புறப்பட்ட மெட்ரோ ரயில், 12.33 மணிக்கு சென்னை கோயம்பேடு ரயில் நிலையத்தை வந்தடைந்தது. முதல் ரயிலில் அரசு மற்றும் மெட்ரோ ரயில் அதிகாரிகள் பயணம் செய்தனர்.

இதன்மூலம் சென்னை நகர மக்களின் நீண்டநாள் கனவான மெட்ரோ ரயில் போக்குவரத்து இன்று நனவாகியது.

Related posts

Leave a Comment