மரண தண்டனையில் இருந்து விடுதலை பெற்றார் மோர்சி!

எகிப்தில் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட முதல் அதிபர் முகமது மோர்சி. முப்பதாண்டுகளுக்கும் மேலாக பதவியில் இருந்த ஹோஸ்னி முபாரக்கை கடந்த 2012-ம் ஆண்டில் பதவியிலிருந்து இறக்கிவிட்டு அதிபர் பதவியைப் பிடித்த மோர்சியால் ஓராண்டுக்கு மேல் அந்தப் பதவியில் நீடிக்க முடியவில்லை.

எகிப்தின் ராணுவத் தலைவராக இருந்த அப்டெல் சிசி  மோர்சியை பதவியிலிருந்து இறக்கி கைது செய்து சிறையிலும் அடைத்தார். அவர்மீது பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவருக்குத் துணை புரிந்த முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணையை எதிர்நோக்கி காவலில் உள்ளனர்.

இவர்களில் சுமார் 100 பேருக்கு ஏற்கனவே தனித்தனியாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், 2011-ம் ஆண்டு நடைபெற்ற புரட்சியின்போது சிறை உடைப்பு தொடர்பான வழக்கில் மோர்சிக்கும் கடந்த ஆண்டு மே மாதம் 16-ம் தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து எகிப்து நாட்டின் சட்டத்தின்படி, அரசாணைகளை வெளியிடும் தலைமை முப்திக்கு இந்த தண்டனை விவரம் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 15-ம் தேதி அளிக்கப்பட்ட இறுதி தீர்ப்பின்போது ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை தலைமை முப்தி ஏற்றுக் கொண்டுள்ளதால் அவரது மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டதாக நீதிபதி அறிவித்தார். இந்த உத்தரவை எதிர்த்து எகிப்து நாட்டின் தலைமை கோர்ட்டில் மோர்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவின் மீது இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம் முன்னாள் அதிபர் முஹம்மது மோர்சிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கின் விசாரணையை மீண்டும் முதலில் இருந்து தொடங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment