இரு சக்கர வாகனம் ஓட்டுவோருக்கு இன்று முதல் ஹெல்மெட் கட்டாயம்.

பைக் ஓட்டுவோர், பின்னால் அமர்ந்து பயணம் செய்பவர்கள் இன்று முதல் ஹெல்மெட் அணிந்து செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சட்டத்தை மீறுபவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  பைக்கில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், “ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவதால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுகிறது. எனவே தமிழக அரசு, ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்பவர்களின் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்ய வேண்டும். பின்னால் அமர்ந்திருப்பவரும் அவசியம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அதிரடியாக கூறியிருந்தது.

இதையடுத்து பைக் ஓட்டிகள் ஜூலை 1ம் தேதி முதல் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று தமிழக அரசும் அறிவிப்பு வெளியிட்டது. இன்று முதல் இந்த கட்டாய ஹெல்மெட் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதனை தீவிரமாக அமல்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
வழக்கமாக ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறையாக இதே தவறை செய்தால் ரூ.300 வசூல் செய்யப்படும். அதேபோல் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். ஆனால், இந்த முறை ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டினால் பைக் பறிமுதல் செய்யப்படும். மேலும், அங்கீகரிக்கப்பட்ட தரமான ஹெல்மெட் வாங்கி வர வேண்டும். அதற்கான ஆவணங்களையும் காட்டினால்தான் நீதிமன்றம் மூலம் பைக் திரும்ப ஒப்படைக்கப்படும். மேலும், ரூ.100 அபராதமும் செலுத்த வேண்டும்.

12 வயது தானா? அணிய வேண்டாம்
போக்குவரத்து உயரதிகாரிகள் கூறுகையில், “அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில் இன்று முதல் தீவிரமாக கண்காணிக்கப்படும். பைக் ஓட்டுபவர்கள் மட்டுமின்றி பின்னால் அமர்ந்து இருப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும். 12 வயதுக்குட்பட்டோருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்கள் ஹெல்மெட் அணிய தேவை இல்லை. வட்டார அலுவலர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் போக்குவரத்து போலீசாருடனும் இணைந்து பணியாற்றுவார்கள்” என்றனர்.

Related posts

Leave a Comment