அமீரக வேலைவாய்ப்பு விசாவிற்கான கட்டாய நன்னடத்தை நற்சான்றிதழ் சட்டம் நிறுத்தி வைப்பு!

அமீரகத்தில் வேலைவாய்ப்பு விசா பெற விரும்புவோர் கட்டாயம் தங்கள் நாடுகளிலிருந்து அல்லது கடைசியாக தொடர்ந்து 5 வருடங்கள் தங்கியிருந்த வெளிநாடுகளிலிருந்து நன்னடத்தை நற்சான்றிதழை பெற்று விண்ணப்பத்துடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என்ற நடைமுறை கடந்த பிப்ரவரி 4 முதல் அமுலுக்கு வந்தது.

இதில், இந்தியர்கள் பல்வேறு நடைமுறை சிக்கல்களை சந்தித்து வந்ததைப் போலவே பிற நாட்டினரும் சந்தித்திருப்பர் என யூகித்துக் கொள்ளலாம். பல்வேறு இடர்ப்பாடுகள் நிலவிய நிலையில் அந்த மாவட்ட எஸ்பி அலுவலகங்கள் வழங்கும் போலீஸாரின் தடையில்லாச் சான்றிதழையே நன்னடத்தை சான்றிதழுக்கு மாற்றாக ஏற்க முன்வந்தது அமீரக தூதரகம். மேலும், அமீரகத்திலுள்ள இந்திய தூதரகமும் தடையில்லாச் சான்றுகளை இங்கிருந்தே பெற்றுக்கொள்ள உதவி செய்ய முன்வந்தது .

இந்நிலையில், கடந்த வாரம் இந்தியா உட்பட 8 நாடுகளுக்கு கட்டாய நன்னடத்தை சான்றிதழ் திட்டத்திலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி சமூக தளங்களில் உலா வந்தன. இச்செய்தி ஏற்றோ அல்லது மறுத்தோ அமீரக அதிகாரிகள் எத்தகைய விளக்கத்தையும் வெளியிடாத நிலையில் முதன்முதலாக அமீரக மனிதவள அமைச்சகம் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

இதன்படி, மறுஅறிவிப்பு வெளியாகும் வரை கட்டாய நன்னடத்தை சான்றிதழை இணைக்க வேண்டும் என்ற சட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது, இதன் மூலம் அனைத்து வெளிநாட்டினருமே சான்றிதழை இணைக்க வேண்டியதில்லை என தெளிவாகிறது.

மேலும் இது தொடர்பான எந்த செய்தியையும் அதிகாரபூர்வ தளங்களில் மட்டுமே வெளியிடுவோம் அதை மட்டுமே பின்தொடர்தல் மாற்றங்கள் குறித்து அறிய போதுமானது எனவும் தெரிவித்துள்ளது.

Source: Gulf News
தமிழில்: அதிரை நியூஸ்

Related posts

Leave a Comment